Friday, September 12, 2008

இன்டர்நெட் இணையம் ஆபத்து

எப்போ பார்த்தாலும் இணையம், இணையம் என்று கணினியே கதியாகக் கிடக்கிறார் என் கணவர். வீட்டைக் கவனிப்பதில்லை, குழந்தைகளுடன் போதிய நேரம் செலவிடுவதில்லை. என்னிடம் பேசுவதற்குக் கூட அவருக்கு நேரமில்லை. நள்ளிரவு வரை இணையத்தில் எங்கெங்கோ உலாவிக் கொண்டு சோர்ந்து போய் தூங்கி விடுகிறார். வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் போய்விட்டது. மணவிலக்கு கோரலாமா என யோசிக்கிறேன் என தன்னிடம் ஆலோசனை பெற வரும் சில இளம் பெண்கள் தெரிவிப்பதாக திடுக்கிடும் தகவல் ஒன்றைத் தெரிவித்தார் சென்னையைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவர் ஒருவர்.
இணையத்திலேயே உரையாடி, இணையத்திலேயே வரன் தேடி, இணையத்தின் வழியாகவே இணைந்த பலரும் இன்று இணையத்தினாலேயே பிரியும் சூழலுக்கும் தள்ளப்படுகிறார்கள் என்பது இந்த நூற்றாண்டில் அவலங்களில் ஒன்று என்றே கருத வேண்டியிருக்கிறது.
“ சும்மா கொஞ்ச நேரம் ‘நெட்’ பாக்கணும் “ என்பது இன்றைக்கு இளைஞர்களிடம் புழங்கும் சர்வ சாதாரணமான பேச்சாகி விட்டது. அதுவும் போட்டி போட்டுக்கொண்டு நிறுவனங்கள் வழங்கும் பிராட்பேண்ட் இணைப்புகள் இணைய வேகத்தை அதிகப்படுத்தி கூடவே பதின் வயதினரின் உற்சாகத்தையும் அதிகரித்திருக்கிறது. கம்பியில்லா இணைப்புகள் வீட்டுக் கணினிகளை படுக்கையறைக்கும், விரும்பும் தனிமை இடங்களுக்கும் இடம்பெயர வழி செய்திருக்கிறது.
உலகை இணைக்கும் ஒரு வலையாகக் கருதப்பட்ட இணையம் இன்று பலருடைய வாழ்க்கையை இறுக்கும் சுருக்குக் கயிறாகவும் மாறிக்கொண்டிருக்கிறது என்பது தான் துயரம். அறிவை வளர்த்த, தகவல் பரிமாற்றங்களை நிகழ்த்த, பயணச் சீட்டு முன்பதிவு செய்ய, தேர்வு முடிவுகள் கண்டறிய என எல்லா வகையிலும் துணையாய் நிற்கும் இணையம் வாழ்க்கையைச் சீரழிக்கும் ஒரு வலையாகவும் மாறிவிட்டது உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானதே.
எப்போதும் இணையத்திலேயே இருக்க வேண்டும் என நினைப்பது, இணையத்திலுள்ள பக்கங்கள் ஒவ்வொன்றாக உலவுவது, எதையேனும் படித்துக் கொண்டே இருப்பது, இணையத்திலுள்ள உரையாடல் தளங்களில் முகம் தெரியாத யாருடனோ உரையாடிக் கொண்டே பொழுதைக் கரைப்பது,பாலியல் சிற்றின்ப தகவல்களில் மூழ்கிக் கிடப்பது, இணைய விளையாட்டுகளில் அடிமைப்பட்டுக் கிடப்பது என இணையத்துக்கு அடிமையாவதைப் பல வகைகளாகப் பிரிக்கிறார்கள் உளவியலார்கள்.
இணையத்தில் உரையாடல் தளங்களில் உரையாடுபவர்களில் 60 விழுக்காடு பேர் தங்களுடைய பெயர், வயது, உயரம், நிறம், உடல் எடை போன்றவற்றைப் போலியாகவே தருகின்றனர் என்கிறது புள்ளி விவரம் ஒன்று. எதிர் பாலினரை வசீகரிக்கும் விதத்தில் தகவல்களைத் தந்து விட்டு ஒரு வித போதையில் உரையாடலில் ஈடுபடுபவர்களே அதிகம் என்கிறது அந்த புள்ளி விவரம்.
பெரும்பாலும் பதின் வயதினர் தான் இந்த உரையாடல் தளங்களில் நிரம்பி வழிகின்றனர். ‘பாலியல் ஈர்ப்பு’ பற்றிக் கொள்ளும் இந்த வயதினர் எதிர் தரப்பில் உரையாடும் நபரைக் குறித்து மனதுக்குள் கற்பனையில் ஒரு உருவத்தை வரைந்து வைத்துக் கொண்டு அவர்களோடு பாலியல் உரையாடல்களில் லயித்து பொழுதையும் உடல் நலத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
புகைத்தல், மது அருந்துதல் போல இணையமும் ஒரு அடிமைப் படுத்தும் சாதனமே என அமெரிக்காவின் மருத்துவ ஏடு உட்பட பல்வேறு மருத்துவ நாளேடுகள் அறிக்கைகள் வெளியிட்டன. முதலில் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதவர்கள் சமீபகாலமாக இணைய அடிமைத்தனத்தின் வீரியம் கண்டு கலங்க ஆரம்பித்திருக்கின்றனர்.
போர்ட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் ஜெரால்ட் பிளேக் இதைக் குறித்து விளக்குகையில் இணையமே கதியெனக் கிடப்பவர்களில் 86 விழுக்காடு மக்களுக்கு ஏதோ ஒரு வகையான உளவியல் பாதிப்பு ஏற்படுகிறது என அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவிக்கிறார். எனவே இணைய அடிமைத்தனத்தையும் போதை அடிமைத்தனம் போல மருத்துவ மனைகள் மிகுந்த கவனத்துடனும் விழிப்புடனும் அணுக வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.
சரியான தூக்கமின்மை, பதட்டம், இணையம் இல்லாவிடில் மன அழுத்தமடைதல், உடல் பலவீனம், முதன்மையான பணிகளில் கவனம் செலுத்த முடியாமை என பல்வேறு விதமான பாதிப்புகள் இணைய அடிமைகளுக்கு வருகிறது என்பதால் இதை மிகவும் எச்சரிக்கையுடனும், முக்கியத்துவத்துடனும் அணுகவேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
பல நாடுகள் ஏற்கனவே இந்த சிக்கல்களிலிருந்து மக்களை விடுவிக்கும் ஏற்பாடுகளைத் துவங்கிவிட்டன என்பது குறிப்பிடத் தக்கது. தென்கொரிய அரசு சுமார் 1000 த்துக்கும் மேற்பட்ட ஆலோசனையாளர்களை பயிற்சிகொடுத்து இணைய பழக்கத்திலிருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளது என்பதை இதன் ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.
இதே போல சீனாவிலும் சுமார் 17.1 விழுக்காடு பதின் வயதினர் இணையத்துக்கு அடிமையாகி இருக்கும் தகவலில் சீன அரசு அரண்டு போய் மீட்பு நடவடிக்கைகளில் துரிதமாய் இறங்கியிருக்கிறது. தாய்லாந்து, தென்கொரியா, வியட்னாம் போன்ற அரசுகளுடன் சீன அரசு இதற்கான விவாதம் நடத்தி பொது ‘கணினி காஃபே’ களில் பதின் வயதினருக்கு தடையும், இணைய விளையாட்டுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் விதித்திருக்கிறது. அது மட்டுமன்றி இளைஞர்களைக் கெடுக்கும் பல்வேறு இணைய தளங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் மக்கள் இணைய அடிமைத்தனத்தைப் புரிந்து கொண்டு அதற்குரிய சிகிச்சையையும் பெற முன்வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக பீஜிங் அருகே உள்ள டாக்ஸிங் மருத்துவமனையில் தினமும் 60 பேர் முதல் 280 பேர் வரை இணைய அடிமைத்தனத்திலிருந்து மீளும் சிகிச்சைக்காக வருகின்றனர் என்பது இந்தச் சிக்கலில் ஆழத்தைச் சுட்டுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் 12 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டோர் என்பது கவலைக்குரிய தகவலாகும்.
இது தவிர சீனாவில் இராணுவத்தினரால் நடத்தப்படும் முழுமையாய் சிறை போன்ற பூட்டிய அறைகளுக்குள் நடக்கும் போதை மீட்பு சிகிச்சைகளும் இணைய பாதிப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கவனிக்கத் தக்கது.
வீட்டுக்கு தொலைபேசி கட்டணம் கட்டுவது முதல், அலுவலக வேலை வரை எல்லா இடங்களிலும் கணினியும் இணையமும் ஆக்கிரமித்திருக்கும் காலம் இது. இணையம் இல்லாத வாழ்க்கையை அலுவலகங்களோ, நிறுவனங்களோ நினைத்துப் பார்க்க முடிவதில்லை இப்போது. மேலை நாடுகளிலெல்லாம் இணையம் இல்லாவிடில் வீடுகளிலும் பல வேலைகள் முடங்கிவிடும் எனும் சூழல். இப்படி தேவைக்காய் மட்டும் பயன்படுத்தினால் மிக மிக பயனுள்ளதாய் இருக்கும் இணையம், பொழுது போக்குக்காய் உலவும் போது சிக்கல்களின் தந்தையாகி விடுகிறது.
முதலில் கொஞ்ச நேரம் என ஆரம்பிக்கும் இந்த பழக்கம். படிப்படியாய் அதிகரித்து இருக்கும் நேரத்தையெல்லாம் ஆக்கிரமிக்கும். வெறுமனே விளையாட்டாய் ஆரம்பிக்கும் ஒரு பழக்கம் எப்படி குடும்ப உறவுகளையும், அலுவல்களையும் சிதைத்து ஒட்டு மொத்த வாழ்வுக்கும் வேட்டு வைக்கிறது என்பதன் சோக உதாரணமாய் நிற்கிறது இந்த இணைய அடிமைத்தனம்.
ஒன்றை அதிகமாய் பற்றிக் கொண்டு முதன்மையான பல செயல்களை உதாசீனப்படுத்தும் எதுவுமே மனிதனை அடிமையாக்குகிறது எனக் கொள்ளலாம். அந்த வகையில் மாயைக்குள்ளும், போலித்தனமான பொழுதுபோக்குக்குள்ளும் இழுத்து படிப்பு, வேலை, குடும்பம் என அனைத்தையும் உதாசீனப்படுத்த வைக்கும் இணையம் நிச்சயம் அடிமைத்தனமே என பல்வேறு உளவியலார்கள் உரத்த குரல் கொடுக்கின்றனர்.
இணைய பழக்கத்துக்கு அடிமையாதல் ( Internet Addiction Disorder – IAD ) எனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி இணையத்தில் உலவத் தோன்றும், நள்ளிரவில் எழும்பி மின்னஞ்சல் வந்திருக்கிறதா என பார்க்கத் தோன்றும், இணைய இணைப்பு இல்லாவிட்டால் எதையோ பறிகொடுத்தது போல் தோன்றும், சாப்பிட மறந்து போகும் என விளக்குகிறார் இந்த அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர். இப்படிப் பட்டவர்களை கண்டறிந்து உடனடியாக மருத்துவ உதவிக்கோ, ஆலோசனைக்கோ வழி செய்தல் அவசியம்.
இன்றைய அதிவேக இணைய இணைப்புகளும், கம்பியில்லா இணைய இணைப்புகளும் இத்தகைய அடிமைத் தனங்களை இன்னும் அதிகப்படுத்துகின்றன. இணையத்தில் கிடைக்கும் எல்லையற்ற பாலியல் படங்களும், தகவல்களும், கதைகளும் பல்வேறு தரப்பினரையும் சிற்றின்பச் சிறைக்குள் லாவகமாய்ப் பூட்டி விடுகின்றன.
தாழ்வு மனப்பான்மையுடன் உலவும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இணையம் ஒரு போலியான தைரியத்தைக் கொடுத்து முகம் தெரியாத பலருடன் உரையாட வைக்கிறது. எனவே இவர்கள் இணைய வாழ்க்கையில் ஹீரோக்களாய் தங்களைப் பாவித்துக் கொண்டு உலாவருகின்றனர். இத்தகையோர் சராசரி வாழ்க்கைக்குத் திரும்புவதை விரும்புவதில்லை என கனடாவைச் சேர்ந்த உளவியலார் ஒருவர் தெரிவிக்கிறார்.
இணையத்தில் ஒரு துணையை வைத்துக் கொண்டு தொடர்ந்து அவர்களுடன் உரையாடுவதும் முகம் தெரியா பாலியல் உறவுகளைத் தொடர்வதும் மனதளவில் வாழ்க்கைத் துணைக்கு துரோகம் இழைப்பதே. இதை மறைக்க பொய்பேசுவதும், திருட்டுத் தனமாய் இணையத்தில் புகுவதும் என குடும்ப வாழ்க்கையின் மதிப்பீடுகள் சிதைவடைகின்றன.
அலுவலகங்களில் கூட பணியாளர்கள் இணையத்தை அலுவலகத் தேவையை மீறி பல மணி நேரங்கள் பயன்படுத்துவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. சுமார் எழுபது விழுக்காடு பேர் அலுவலகங்களில் இணையத்தை அலுவலகம் சாராத பணிகளுக்காய் பயன்படுத்துவதாய் சமீபத்தில் ஒரு ஆய்வு தெரிவித்திருந்தது.
இணையத்தை அதிகம் பயன்படுத்துவோரில் 24 விழுக்காட்டினர் அது தங்கள் வாழ்வில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதை ஒத்துக் கொள்கின்றனர். உலக அளவிலான கருத்துக் கணிப்பு ஒன்று இணையம் பயன்படுத்துவோரில் 50 விழுக்காடு குடும்பங்களில் உறவு விரிசல், சண்டை, அமைதியின்மை என பிரச்சனைகள் தலைதூக்க இணையம் காரணமாய் இருப்பதாய் தெரிவிக்கிறது.
இணையத்தைப் பயன்படுத்த ஆரம்பிப்பவர்களில் சுமார் 11 விழுக்காடு பேர் இணைய அடிமைகளாக மாறி விடுவதாகவும் ஒரு அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் மட்டுமே சுமார் 22 கோடி பேர் இணைய இணைப்பு வைத்திருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். எனில் உலகெங்கும் எந்தனை கோடி பேர் இணையம் பயன்படுத்துகின்றனர், அவர்களில் பதினோரு விழுக்காடு என்பது எத்தனை கோடி என கணக்கிட்டால் இந்த பாதிப்பின் வீரியம் சிறிதல்ல என்பது புலனாகும்.
இணையத்தில் இப்போது உரையாடல் பகுதிகளில் உலவுவோரில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். ஆண்களே அதிகம் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருந்த இந்த பகுதிகளில் பெண்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருப்பது எல்லா பாலினரையும் வசப்படுத்தும் வலிமை இணையத்துக்கு இருப்பதையே படம் பிடிக்கிறது.
கல்வியில் தோல்வி, திருமண வாழ்வில் தோல்வி, சுய முன்னேற்றத்தில் தோல்வி, அலுவலில் தோல்வி என பல்வேறு தோல்விகளை தோளில் சுமத்தும் இந்த இணைய அடிமைத்தனம் மன அழுத்தம், மாயை வாழ்க்கை என பல்வேறு உளவியல் சிக்கல்களையும் வருவித்து விடுகிறது.
மேலை நாடுகளில் பதினாறு வயதுக்கு உட்பட்ட பல பதின் வயதினர் பாலியல் அடிமைகளாக இருக்கின்றனர். அதாவது நேரடியாக பாலியல் தவறுகளில் ஈடுபடாமல் இணணயத்தில் உரையாடல்களிலும், சிற்றின்பப் பேச்சுகளிலும் சிக்கி அடிமைத்தனத்துக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.
இணையத்துக்கு அடிமையாபவர்களில் 54 விழுக்காட்டினர் மன அழுத்தத்துக்கும், போதை போன்ற அடிமைத்தனத்துக்கும் தள்ளப்படுவதாக ஒரு அதிர்ச்சியூட்டுகிறது ஒரு ஆய்வு.
தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்ப்பதைப் போல ஒரு பழக்கம் தானே என பலர் இதை இலகுவாகக் கணிப்பதுண்டு. ஆனால் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை ஒளிபரப்புபவற்றை மட்டுமே பார்க்க வேண்டிய கட்டாயம் பார்வையாளனுக்கு உண்டு. ஆனால் இணையம் அப்படியல்ல. விரும்புவதைத் தேடிச் சென்று பெற்றுக் கொண்டே இருக்கலாம் என்பதும், வாழ்வைச் சீரழிக்கும் சிற்றின்பச் சங்கதிகளின் சங்கமமாக இருக்கிறது என்பதும் இணையம் தொலைக்காட்சியைப் போலன்றி மிக மிக ஆழமான பாதிப்பை சமூகத்தில் ஏற்படுத்தக் கூடியது என்பதை வலுப்படுத்துகிறது.
திரைப்படங்களுக்கு ஒரு முடிவு உண்டு, நாவல்களுக்கும் ஒரு கடைசிப் பகுதி உண்டு, தொலைக்காட்சிக்கும் போரடித்துப் போகும் ஒரு நிலமை உண்டு. ஆனால் இணையம் உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப உங்களை உள்ளிழுத்துக் கொண்டே இருக்கும் ஒரு வசிய வலை.
இதை ஒரு தனி மனித பாதிப்பாய் மட்டுமே கருதிக் கொள்வது இந்தப் பாதிப்பின் வீரியத்தைப் புரிந்து கொள்ளாமையேயாகும். இணையத்தை இன்றைய பெரும்பாலான பதின் வயதினரும், இளைஞர்களும் பயன்படுத்துகின்றனர். இவர்கள் இணையத்தில் செலவிடும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க, அவர்களுடைய சமூகப் பங்களிப்பு குறைகிறது. ஒரு பலவீனமான சமூக கட்டமைவு உருவாக இணைய அடிமைத்தனம் மறைமுகமாய் தூண்டுகிறது. எனவே இந்த அடிமைத்தனம் ஒரு சமூக அவலம் என்பதை உணர்தல் அவசியம்.
இணைய அடிமைத்தனம் நமது இளைய தலைமுறையினரை ஒட்டு மொத்தமாய் செல்லாக்காசுகளாக்கி விடும் அபாயத்திலிருந்து தப்பிக்க பெற்றோர், வழிகாட்டிகள் விழிப்புடன் இருத்தல் அவசியம். பதின் வயதினர் இணைய அடிமைகளாவதிலிருந்து தடுக்க இவற்றைக் கடைபிடிக்கலாம்.
• இணைய அடிமைத்தனமும் மற்ற அடிமைத்தனங்களும் ஒரே போல வீரியமுடையவை என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும். வீட்டிலே தானே இருக்கிறான், அறையில் தானே எப்போதும் இருக்கிறான் என அலட்சியமாய் இருக்கக் கூடாது.
.• அத்தியாவசியத் தேவை இல்லாத போது இணையத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். கொஞ்ச நேரமே இணையம் பயன்படுத்துவோருக்கு இணைய அடிமைத்தன சிக்கல் உருவாவதில்லை. எனவே மிகக் குறைந்த நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த அனுமதித்தல் சிறப்பானது.
.• சமூக விழாக்கள், விளையாட்டுப் பயிற்சிகள் என பதின் வயதினர் யதார்த்த நிகழ்வுகளில் அதிகம் ஈடுபட உற்சாகப்படுத்த வேண்டும். உடற்பயிற்சிகள் செய்ய அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.• குடும்ப உரையாடல்களை அதிகப்படுத்த வேண்டும். குழந்தைகளில் வாழ்வில் நடந்த சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுடைய எதிர்பார்ப்புகளைத் தெரிந்து கொள்ளவும் குடும்ப உரையாடல்கள் வழிவகுக்கும். இவை பதின் வயதினர் வழி தவறிச் செல்லாமல் இருக்க உதவும்
.• இரகசியமாய் இணையத்தில் பதின் வயதினர் உலவ அனுமதி மறுக்க வேண்டும். முடியாத பட்சத்தில் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். பதின் வயதினர் எந்தெந்த தளங்களுக்குச் செல்கின்றனர் என்பதைக் கண்காணித்தல் நல்லது.
.• கணினி அறிவு அதிகம் உடைய பெற்றோரெனில் சந்தையில் கிடைக்கும் ஃபில்டர் மென்பொருட்கள் வாங்கி கணினியில் நிறுவலாம். இவை தேவையற்ற இணைய தளங்களைத் தடுக்கும்.
.• இணையத்தில் தொலைபேசி எண்கள், வீட்டு விலாசம், கடன் அட்டை எண்கள், புகைப்படங்கள் போன்றவற்றை தரக்கூடாது என பதின் வயதினரை எச்சரிக்க வேண்டும். இணைய சூதாட்டங்கள், இணைய விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபட குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பது நல்லது.
.• தேவையில்லையெனில் பிராண்பேண்ட் இணைப்புகள் வாங்காமல் இருக்கலாம். டயலப் எனப்படும் குறைந்த வேக இணைப்புகளைப் பயன்படுத்துவது இணைய அடிமைத்தனத்திலிருந்து பெருமளவுக்கு விடுதலை தருகிறது.
.• குடும்பமாக அவ்வப்போது இணையமே இல்லாத இயற்கைச் சூழல் நிறைந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம்.
.• நண்பர்கள், புத்தகங்கள் என நல்ல வகையில் நேரத்தைச் செலவிட உற்சாகப்படுத்துதல். நல்ல நண்பர்களை வீட்டுக்கு அழைத்து நல்ல உரையாடல்களை ஊக்கமூட்டலாம்.
எல்லா வினைக்கும் அதற்குச் சமமான எதிர் வினை இருக்கிறது எனும் நியூட்டனின் விதியை இணையமும் நிரூபிக்கிறது. கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்பதை இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

No comments: